
“அமித்ஷா அல்ல.. எந்த ஷா வந்தாலும் சரி, உங்களால் தமிழ்நாட்டை ஆள முடியாது. உங்கள் பரிவாரங்களை எல்லாரையும் சேர்த்துட்டு வாங்க.. ஒரு கை பார்ப்போம்” என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு சவால் விடுத்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஆண்டார் குப்பத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும், திட்டங்களையும் வெளியிட்டார். சுமார் 2 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.357.43 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன், ரூ.418.15 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைத்தார். மேலும், ரூ.390.74 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி புதிய வளர்ச்சிப் பணிகளை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து இந்த விழாவில் பேசிய தமிழக முதல்வர் மத்திய அரசின் நிலைப்பாடுகளையும், தமிழக உரிமைகளுக்கான திமுகவின் போராட்டத்தையும் தொடர்ந்து வலியுறுத்தி, மாநில உரிமைகளுக்காக தமிழ்நாடு தொடர்ந்து இந்திய அளவில் முன்னணி குரலாக இருக்கிறது எனக் கூறினார்.
மாநில உரிமைகளை கேட்பது குற்றமல்ல , நீட் தேர்வு, மும்மொழி திட்டம், வக்பு திருத்த சட்டம் மற்றும் தொகுதி மறுசீரமைப்பை போன்றவற்றை எதிர்த்து பேசியதில் இந்திய அளவில் திமுகவே முன்னணியில் இருக்கிறது .மாநில அரசின் நிலைப்பாடுகளை மத்திய அரசு மதிக்காததால் தான், ஆளுநர் தொடர்பான விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வரை சென்று சாதனையாக தீர்ப்பு பெற்றுள்ளோம்.
மேலும் திமுகவின் பவர் என்ன என்பது தமிழக மக்களுக்கு மட்டுமின்றி, இந்திய மக்களுக்கே இப்போது தெரிந்திருக்கிறது. திசை மாறி சென்றிருப்பவர்கள், திசைகாட்டியாக இருக்கும் எங்களை பார்த்து புலம்ப வேண்டாம் என்று தெரிவித்தார்.
அத்துடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரடியாக சுட்டிக்காட்டிய அவர், “அமித்ஷா அல்ல, எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது. உங்கள் பரிவாரங்களை எல்லாரையும் கூட்டிக்கொண்டு வாருங்கள், ஒரு கை பார்ப்போம்,” என்று சவால் ஒன்றையும் விடுத்துள்ளார் பாஜகவின் பழக்கமான ஆட்சி வியூகங்கள் தமிழ்நாட்டில் வெற்றி காணாது என்றும், தமிழக மக்கள் எப்போதும் தங்களது உரிமைகளுக்காக நின்று கொண்டே இருப்பார்கள் என்றும் கூறினார்.
மத்திய அரசின் ரெய்டு மற்றும் அழுத்த நெடுங்கட்டமைப்புகள் தமிழகத்தில் பயனளிக்காது எனக் கூறிய ஸ்டாலின், 2026-ம் ஆண்டிலும் திராவிட மாடல் ஆட்சியே தொடரும் எனவும் அந்த கூட்டத்தில் தெரிவித்துள்ளார்