
கரூரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து அரசியல் சூழல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் திட்டமிட்ட சதியாக நடந்தது என தவெக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், விஜய் முதல்முறையாக தனது மனநிலையை வெளிப்படுத்தியுள்ளார். எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட 5 நிமிட வீடியோ தற்போது விவாதமாகியுள்ளது.
இந்த வீடியோவை கடுமையாக விமர்சித்த விசிக எம்.எல்.ஏ. ஆளூர் ஷாநவாஸ், “விஜயிடம் அரசியல் கூர்மை இல்லை என்று நினைத்தோம். ஆனால் தற்போது அவரிடம் அரசியல் நேர்மையும் இல்லை என்பது தெளிவாகிறது. திட்டமிட்ட நாளில் வராமல் திடீரென வந்தது, தாமதமாக வருகை தந்தது, அதிகமான கூட்டத்தை திரட்டியது, குடிநீர் வசதி கூட ஏற்பாடு செய்யாதது, நீதிமன்றம் மற்றும் போலீஸ் எச்சரிக்கைகளை புறக்கணித்தது என பல தவறுகளை விஜய் செய்துள்ளார். இருந்தும், வருத்தம் தெரிவிக்காமல் முதலமைச்சருக்கு சவால் விடுகிறார்” என குற்றம்சாட்டினார்.
மேலும் அவர், “மூன்று நாட்களாக விஜய்க்கு ஆதரவாக இருந்தவர்களுக்கே, இப்போது அவரது வீடியோ வெட்கம் தரும் நிலையில் உள்ளது. பொய் சொல்லுதல், புரட்டிப் பேசுதல், வன்மத்தை தூண்டுதல், எதற்கும் பொறுப்பு ஏற்காமல் கல் மனதுடன் செயல்படுதல் ஆகியவற்றில் விஜய், அண்ணாமலை மற்றும் ஆர்.என்.ரவி போன்றவர்களைப் பின்பற்றி வருகிறார். இது அவர் RSS, பாஜக சாயலில் இருப்பதற்கு சான்று. வழக்கமாக RSS தலைவர்கள் பிரச்சனை என்ற உடன் மன்னிப்பு கேட்டு தப்பித்துக் கொள்வார்கள். ஆனால் விஜய் மன்னிப்பு கேட்காமல் தப்பித்து வருகிறார்” என்றும் தெரிவித்தார்.
இதனால், கரூர் துயரம் குறித்த விஜயின் வீடியோவையே தற்போது அரசியல் வட்டாரங்கள் கடுமையாக சாடி வருகின்றன.