இரண்டு சனியன்களை கையில் எடுத்துக்கொண்டு சனிக்கிழமைதோறும் விஜய் வருகிறார் – சீமான் தாக்குதல்

Seeman criticizes Vijay, claiming he carries two Saturn idols and visits every Saturday.


சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் விடுதலைப் புலிகள் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கட்சித் தலைவர் சீமான் செய்தியாளர்களிடம் பேசியபோது, “உலகம் முழுவதும் 13 கோடி மக்கள் வாழும் இனம் தமிழ் இனம். சோழர் பல நாடுகளை வென்று புலி கொடியை ஏற்றினாலும் இனக் கொடியை ஏற்றவில்லை. இதனால் தமிழருக்கு தனி நாடு இல்லாமல் போனது. தாயக விடுதலைக்காக உயிர் நீத்த திலீபனின் வழியில் நாங்களும் எங்கள் இலக்கை நோக்கிப் போராடி வருகிறோம்” என்றார்.

அவர் மேலும், “தமிழக அரசு நடத்தும் கல்வி விழா பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியைப் போலவே இருக்கிறது. கல்வி வளர்ச்சி குறித்து பேசுவதற்கு இத்தகைய அரசுக்கு எந்தத் தகுதியும் இல்லை. பள்ளிப் படிப்பு முடித்தும் மாணவர்கள் தமிழில் எழுத முடியாத நிலை உள்ளது. அதுவே இவர்கள் சாதனை. அதிமுக, திமுக ஆட்சிகளில் தொழில் முதலீடு தொடர்பாக எந்த முன்னேற்றமும் இல்லை. வெளிநாட்டு முதலாளிகள் மக்கள் நலனுக்காக வரமாட்டார்கள்; லாபத்திற்காக மட்டுமே வருவார்கள். சாலை வரியும், சுங்கக் கட்டணமும் வசூலித்து மக்களை ஏமாற்றுகின்றனர். தமிழக அரசு எங்கு பார்த்தாலும் கருணாநிதியின் பெயரை வைத்துள்ளது; நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அவை மாற்றப்படும்” எனக் கூறினார்.

விஜயை குறிவைத்து சீமான், “விஜய் தற்போது பிரசாரம் என்ற பெயரில் உப்புமா கிண்டிதான் எடுத்துச் செல்கிறார். அதிமுகவிடமிருந்து இரண்டு இட்லி, திமுகவிடமிருந்து இரண்டு இட்லி என எடுத்துக்கொண்டு செயல்படுகிறார். அண்ணா, எம்.ஜி.ஆர். என இரண்டு சனியன்களை கையில் எடுத்துக்கொண்டு சனிக்கிழமைதோறும் விஜய் வருகிறார். அவர் மண்ணரிப்பா மீனரிப்பா என்பதை கூட படிக்க முடியவில்லை. எழுதிக் கொடுத்த உரையை கூட ஒழுங்காகப் படிக்க முடியவில்லை. செல்லும் இடங்களில் ‘சொன்னார்களே செய்தார்களா’ என்று கேட்பது மட்டுமே போதுமா? மக்கள் பிரச்சனைகளைப் பற்றி பேச வேண்டாமா?” என கேள்வி எழுப்பினார்.

“பிப்ரவரி மாதம் வரையில்தான் விஜய் பிரசாரம் செய்வதாக அறிவித்துள்ளார்; அது அவருடைய விருப்பம். அண்ணனின் பேச்சை கேட்கவில்லை என்றாலும் அவருக்கு எனது வாழ்த்துகள்” என சீமான் முடிவுறுத்தினார்.