
பா.ம.க. நிறுவனர் தலைவர் டாக்டர் ராமதாஸ், தனது மகன் அன்புமணியை கட்சியிலிருந்து நீக்கி சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டார். இதையடுத்து, அன்புமணி தரப்பினர் தான் சட்டபூர்வ தலைவராக உள்ளதாகவும், தேர்தல் ஆணையம் மாம்பழ சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்தனர். ஆனால், இது உண்மைக்கு புறம்பானது, போலியான முகவரிகள் கொடுக்கப்பட்டுள்ளன என டாக்டர் ராமதாஸ் தரப்பினர் எதிர்த்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் தேவையான ஆவணங்களை ராமதாஸ் தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளனர். இதை தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை பா.ம.க. உயர்மட்ட ஆலோசனை குழுக் கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்றது. அதேபோல், முன்னாள் நீதிபதி அருள், பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி உள்ளிட்டோர் டாக்டர் ராமதாஸுடன் தனிப்பட்ட ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், இன்று பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில், அன்புமணியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே நீக்கியது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பா.ஜ.க. அல்லது பிற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாகவும் கருத்துகேட்பு நடத்தப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி, எம்.எல்.ஏ. அருள், தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், டாக்டர் ராமதாஸின் மகள் ஸ்ரீகாந்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மேலும், நாளை (புதன்கிழமை) வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.