புதிதாக அரசியலுக்கு வருபவர்கள் தி.மு.க.வை தான் விமர்சிப்பார்கள் – கனிமொழி

"Kanimozhi says newcomers to politics tend to criticize the DMK"


முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 117-வது பிறந்தநாளை முன்னிட்டு, கன்னியாகுமரி ரவுண்டானா சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அப்போது நிருபர்கள், தி.மு.க.வை தொடர்ந்து த.வெ.க. தலைவர் விஜய் விமர்சித்து வருவதாக கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த கனிமொழி எம்.பி., “புதிதாக யார் அரசியலுக்கு வந்தாலும், திராவிட முன்னேற்றக் கழகத்தை பற்றி பேசினால்தான் அவர்களுக்கு அடையாளம் கிடைக்கும் என்பது தெளிவான ஒன்று. அதனால்தான் அவர்கள் எப்போதும் எங்களை விமர்சிப்பார்கள்.

தமிழகத்தின் மிகப்பெரிய ஆளுமையாக, தமிழகத்தின் சிந்தனை போக்கையும் அரசியல் நிலையின் போக்கையும் மாற்றியவர் அண்ணா. அவரது கருத்துக்களின் வழியில் இன்று தி.மு.க. ஆட்சி நடைபெற்று வருகிறது” எனக் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் மனோ தங்கராஜ், மேயர் மகேஷ், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.