சீருடையில் டி.எஸ்.பி. சங்கர் கணேஷ் கைது : காரணம் என்ன ?

Police officer DSP Shankar Ganesh arrested while in uniform; details about the reason behind the arrest.


காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள பூச்சிவாக்கம் கிராமத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு நள்ளிரவில் மர்ம நபர்கள் பேக்கரி கடையில் புகுந்து முருகன் என்பவரை கடுமையாகத் தாக்கினர். இந்த வழக்கை வாலாஜாபாத் போலீசார் பின்னர் வன்கொடுமை சட்டத்திற்கு மாற்றினர். இதற்கிடையில் ஒரு காவலரும் சம்பந்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது. எனினும், அந்த காவலரின் பெயரை வழக்கில் சேர்க்காமல், வழக்கு நிலுவையில் வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.

பாதிக்கப்பட்ட முருகன் இதுகுறித்து காஞ்சிபுரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கு இன்று (08.09.2025) நீதிபதி செம்மல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, “இந்த வழக்கை விசாரித்த காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் ஆஜராக வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் அவர் பணிக்காக சென்னை சென்றிருந்ததால், காஞ்சிபுரம் நகர சட்ட ஒழுங்கு துணை கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இதையடுத்து, காவலரை வழக்கில் சேர்க்காத குற்றச்சாட்டின் அடிப்படையில் டி.எஸ்.பி. சங்கர் கணேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவரை வரும் 22ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதற்கிடையில், நீதிமன்ற உத்தரவுக்குப் பின் டி.எஸ்.பி. சங்கர் கணேஷ் சீருடையுடன் நீதிமன்ற வளாகத்தில் கைது செய்யப்பட்டார். அப்போது, அவர் சக காவலர்களின் உதவியுடன் வாகனத்தில் தப்பியோடினார் என்ற செய்தி முதலில் பரவியது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் சிறிது நேரத்திலேயே டி.எஸ்.பி. சங்கர் கணேஷ் போலீஸ் வாகனத்தில் காஞ்சிபுரம் கிளை சிறைக்கு வந்தார். இதுகுறித்து காவல்துறை விளக்கமளித்ததில், “அவர் தப்பியோடவில்லை; நீதிமன்ற வளாகத்தில் கழிவறைக்கு சென்றிருந்தார்” எனத் தெரிவித்தனர்.