ஆடுதுறையில் பாமக நிர்வாகி மீது வெடிகுண்டு வீசி கொலை முயற்சி!

"PMK functionary survives bomb attack in Aathur, targeted in attempted murder."


கும்பகோணம் அடுத்துள்ள ஆடுதுறையில் பேரூராட்சித் தலைவராக பாமக நிர்வாகி ம.க.ஸ்டாலின் உள்ளார். இன்று வழக்கம்போல் அவர் அலுவலகத்தில் பணிகளை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பத்துக்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் அலுவலக கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் வெடிகுண்டுகளை வீசி அங்குள்ளவர்களை தாக்கியுள்ளனர்

ம.க.ஸ்டாலின் அங்கிருந்து தப்பி ஓடியதால் நூலிழையில் உயிர்தப்பியுள்ளார். மேலும் அலுவலகத்தில் இருந்த சிலரை அந்த கும்பல் அரிவாளால் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து பொதுமக்கள் சாலையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நடுசாலையில் வாகன டயர்களை எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போராட்டம் காரணமாக ஆடுதுறை மற்றும் சுற்றுப்புறங்களில் பதற்றம் நிலவுகிறது. மேலும் 300க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. போலீசார் சம்பவ இடத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.