நகர் மன்ற பெண் உறுப்பினரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பட்டியலின இளநிலை உதவியாளர் – சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!

Junior assistant apologizing at the feet of a woman municipal councilor during a controversial incident in the municipal office.

திண்டிவனம் நகராட்சியில் நகர் மன்ற பெண் உறுப்பினரின் காலில் கட்டாயப்படுத்தி பட்டியலின இளநிலை உதவியாளரை விழ வைத்த அவலம் சிசிடிவி காட்சிகள் மூலம் வெளிவந்ததால் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முனியப்பன் என்பவர் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். ஆகஸ்ட் 28ஆம் தேதி, திமுக 20-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ரம்யா, தனது வார்டில் 2021ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டு பணிகளுக்கான கோப்புகளை முனியப்பனிடம் கேட்டுள்ளார். பழைய கோப்புகளைத் தேடுவதில் தாமதம் ஏற்பட்டதால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, முனியப்பன் தகாத வார்த்தையில் பேசியதாக ரம்யா, திமுக நகர்மன்றத் தலைவர் நிர்மலாவின் கணவர் ரவிச்சந்திரனிடம் புகார் கூறியுள்ளார். இதற்காக ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையர் இல்லாத நேரத்தில் அலுவலக அறைக்குள் பஞ்சாயத்து நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது முனியப்பன் வருந்தி மன்னிப்பு கேட்டாலும், தனது காலில் விழுந்தே மன்னிப்பு கேட்க வேண்டும் என உறுப்பினர் ரம்யா வற்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், “காலில் விழுந்து மன்னிப்பு கேட்காவிட்டால் உன்னை வேலையிலிருந்து நீக்கி விடுவேன்” என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால், வேறு வழியின்றி முனியப்பன் கண்ணீர் சிந்தியபடி ரம்யாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.

நான்கு சுவற்றுக்குள் நடந்த இந்த சம்பவம் வெளியே தெரியாமல் போய்விடும் என நினைத்தபோது, நகராட்சி ஆணையர் அறையில் இருந்த சிசிடிவி காட்சிகள் பதிவு செய்யப்பட்டு தற்போது வெளியேறியதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

இந்த சம்பவத்தை கண்டித்த திமுக, அதிமுக, விசிக உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, அரசு ஊழியரை கட்டாயப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட நகர்மன்ற உறுப்பினர் ரம்யா மற்றும் நகர்மன்றத் தலைவர் நிர்மலாவின் கணவர் ரவிச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும், இந்த அவலம் தொடர்பாக நகராட்சி மேலாளர் நெடுமாறன் மற்றும் திண்டிவனம் டிஎஸ்பி பிரகாஷ் ஆகியோரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், முனியப்பன் அண்மையில் சுதந்திர தின விழாவில் சிறந்த பணியாளருக்கான சான்றிதழை மாவட்ட ஆட்சியரிடம் பெற்றவர் ஆவார்.

இந்தச் சம்பவம் சிசிடிவி காட்சிகளுடன் வெளிவந்ததால், திண்டிவனம் நகரத்தில் அரசியல் சர்ச்சை தீவிரமாக பரவி வருகிறது.