இந்து மதத்தை திமுக  இழிவுபடுத்தியதாக எதிர்க்கட்சிகள் கண்டனம்  

இந்து மதத்தை திமுக இழிவுபடுத்தியதாக எதிர்க்கட்சிகள் கண்டனம்

இந்து கோவிலின் கோபுர சின்னத்தை  சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில்  வரைந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


இந்த சம்பவம் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியதிலிருந்து அமைச்சர் சேகர்பாபு மீது  பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருவதுடன் அமைச்சர் சேகர்பாபு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்

சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறையின் மானிய கோரிக்கையை ஒட்டி, அமைச்சர் சேகர்பாபு கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய போதே இந்த அலங்காரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொட்டு வைக்காதே, திருநீற்றை அழி, என இந்துக்களின் நம்பிக்கைகளையும், இந்து சமயங்களையும் இழிவு செய்து திமுக அரசு இதுவரை கேவலப்படுத்தியது போதாதா?  தற்போது கருணாநிதி நினைவிடம் மீது கோவில் கோபுரங்களை வரைந்து இந்துக் கோயில்களின் புனிதத்தை கெடுக்க வேண்டுமா என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், கேள்வி எழுப்பியுள்ளார்.

 அத்துடன்  பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை,  கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்கள் என்று கூறிக்கொள்ளும் திமுகவினர், காலகாலமாக இந்து சமய மக்கள் நம்பிக்கைகளைப் புண்படுத்துவதையே தொழிலாகக் கொண்டிருப்பதாகவும்   நாத்திகம் என்ற பெயரில் நாடகமாடி, இந்து மத நம்பிக்கைகளை அவமானப்படுத்துவது  போன்று நடந்து கொள்வது தொடருமானால், மக்கள் கண்டிப்பாக பதிலடி கொடுப்பார்கள் என்றும்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.


அதிமுகவும் இச்செயலை கண்டித்து, திமுக அரசு தொடர்ந்து இந்து மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தி வருவதாகவும்  இந்துக்களை கொச்சைப்படுத்துவதில் அப்படி என்ன சந்தோஷம் ஏற்படுகிறது உங்களுக்கு எனவும்  கேள்வி எழுப்பியுள்ளது 

.இந்த விவகாரம் அரசியல் மற்றும் சமுதாயத்தில் பரவலான விவாதங்களுக்குப்பட்டுள்ளதுடன் , பலரும் அமைச்சர் சேகர்பாபுவின் செயலுக்கு  எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்