
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே மோட்டூர் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரி (24), கணவர் நாகேஷுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் உறவினர்களுடன் ராயக்கோட்டை மேம்பாலம் அருகே கூடாரத்தில் தங்கி வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு 2 மற்றும் 6 மாத பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை அங்கு வந்த ஒரு பெண், “உங்கள் ஜாதகத்தில் தோஷம் உள்ளது. குழந்தைக்கு புதிய ஆடைகள், விளையாட்டு பொருட்கள் வாங்கித் தந்தால் நன்மை ஏற்படும்” எனக் கூறி, ஈஸ்வரி மற்றும் 6 மாதக் குழந்தையை ஆட்டோவில் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் ஈஸ்வரியை அங்கே இறக்கிவிட்டு, குழந்தையுடன் அருகிலிருந்த கோவிலுக்குச் சென்று வருகிறேன் எனச் சொல்லிச் சென்ற அந்தப் பெண் திரும்பவில்லை என கூறப்படுகின்றது
இதனால் சந்தேகம் அடைந்த ஈஸ்வரி கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் அளித்தார். சிசிடிவி காட்சிகள் மற்றும் கடையில் கூகுள் பே மூலம் பணம் செலுத்திய மொபைல் எண் வழியாக விசாரித்ததில், குழந்தையை கடத்திச் சென்றவர் ஊத்தங்கரை ஆண்டியூரைச் சேர்ந்த விஜயசாந்தி (26) என்பதும், அவர் ஓசூரில் உள்ள லாட்ஜில் தங்கி இருப்பதும் தெரியவந்தது.
உடனடியாக ஓசூருக்கு விரைந்த போலீசார், விஜயசாந்தியை கைது செய்து, குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், விஜயசாந்திக்கு முன்னாள் கணவருடன் விவாகரத்து ஏற்பட்டதையும், இரண்டாவது திருமணத்திற்குப் பிறகு பெண் குழந்தை இறந்தே பிறந்ததையும், இதை மறைத்து கணவரிடம் ‘குழந்தைக்கு தோஷம்’ எனக் கூறி வந்ததையும் போலீசார் கண்டறிந்தனர்.
இதற்கிடையில், ஆதரவற்ற பெண்களுடன் தங்கியிருந்த ஈஸ்வரியை ஏமாற்றி குழந்தையை கடத்திச் சென்றதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்தச் சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.