
விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் ஆசிரியர் பால் வின்சன்ட், போக்சோ சட்டத்தின் கீழ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் நகரப் பகுதியில் உள்ள அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவிகளுக்கு ஆங்கிலம் கற்பித்து வந்த இடைநிலை ஆசிரியர் பால் வின்சன்ட், மூன்று மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவிகள் தலைமை ஆசிரியர் சசிகலாவிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தனர்.
இதையடுத்து தலைமை ஆசிரியர் உடனடியாக குழந்தைகள் நல அமைப்பிற்கு தகவல் வழங்கினார். பின்னர் அமைப்பினர் விசாரணை நடத்தியதில், ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்த தகவல் பரவியதும் மாணவிகளின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் பள்ளிக்குச் சென்று சம்பந்தப்பட்ட ஆசிரியரை தாக்க முயன்றனர். சூழ்நிலை பதற்றமாக மாறிய நிலையில் போலீசார் தலையீடு செய்து நிலைமை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பின்னர் ஆசிரியர் பால் வின்சன்ட் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, போலீசார் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.