
மதுரையில் நடைபெற்ற த.வெ.க மாநாட்டில் தொண்டரை தூக்கி வீசியதாக கூறப்படும் சம்பவத்தில் கட்சித் தலைவர் விஜய் மற்றும் 10 பவுன்சர்கள் மீது பெரம்பலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மதுரையில் கடந்த 21 ஆம் தேதி த.வெ.க மாநாடு நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்டம் பெரியம்மாபாளையத்தைச் சேர்ந்த சரத்குமார் என்ற தொண்டர் தடுப்புகளை தாண்டி நடைமேடையில் ஏறி விஜயின் அருகே சென்றார். இதனைத் தொடர்ந்து அங்கிருந்த தனியார் பாதுகாவலர்கள் அவரை தூக்கி கீழே வீசியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சரத்குமார் பெரம்பலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் விஜய் மற்றும் பவுன்சர்கள் 10 பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் பெரம்பலூர் மாவட்ட போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் சம்பவ இடம் சேர்ந்த காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.