போப் பிரான்சிஸ் காலமானார்

போப் பிரான்சிஸ் காலமானார்

கத்தோலிக்க திருச்சபையின் 266-வது தலைவரும், முதல் லத்தீன் அமெரிக்க மற்றும் ஜெச்யூட் போப்புமான பிரான்சிஸ்,  ஏப்ரல் 21, 2025, காலை 7:35 மணிக்கு வாடிகனில் உள்ள அவரது இல்லமான காசா சாண்டா மார்த்தாவில் தனது 88 ஆவது வயதில் காலமானார்.

போப் பிரான்சிஸ், கடந்த பிப்ரவரி மாதம் இருமுறை நிமோனியா மற்றும்  சுவாசக் கோளாறு காரணமாக  மருத்துவமனைக்குச் சென்று  38 நாட்கள் சிகிச்சை பெற்று, மார்ச் 23 அன்று வாடிகனுக்கு திரும்பினார்.

அவரது இறப்பை வாடிகன் கேமர்லெங்கோ கார்டினல் கெவின் ஃபெரெல் அறிவித்துள்ளார். அவரது இறுதி விருப்பப்படி, பொதுமக்கள் அவரது உடலை நேரில் பார்வையிடும் வழக்கத்தை தவிர்த்து, மரியாதை செலுத்தும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.


போப் பிரான்சிஸ், 2013 ஆம் ஆண்டு மார்ச் 13 அன்று போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது போப்பின் இறப்புக்குப் பிறகு, புதிய போப்பை தேர்ந்தெடுக்க பாபல் கான்கிளேவ் மே 6 முதல் 11 வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

நேற்று ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு வாடிகன் சதுக்கத்தில் கூடிய ஆயிரக்கணக்கான மக்களை நோக்கி புனித பேதுரு பேராலயத்தில் இருந்தவாறு போப் பிரான்சிஸ் கையசைத்து ஈஸ்டர்  வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


போப் பிரான்சிஸ், தனது வாழ்நாளில், கருணை, எளிமை, மற்றும் நம்பிக்கையை முன்னிறுத்தி, கத்தோலிக்க திருச்சபையின் முகத்தை மாற்றியவர். அவரது மறைவு, உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்கர்களுக்கு பெரும் இழப்பாக பார்க்கபடுகிறது.

மேலும் உலக நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.