
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உத்தனப்பள்ளி சாலையில் கள்ளச்சந்தையில் மது விற்பனை தொடர்பாக, போலீஸாரும் சிஐடி அதிகாரிகளும் லஞ்சம் வாங்கியதாக ஆடியோ பதிவு வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 24ஆம் தேதி இரவு, 10க்கும் மேற்பட்டோர் அங்குள்ள 35 வயது பெண்ணின் கடைக்கு சென்று பிறந்தநாள் கொண்டாட வேண்டும் எனக் கூறி, குறைந்த விலையில் மதுப் பாட்டில்கள் தருமாறு கேட்டுள்ளனர். ஆனால் அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தில், அந்த கும்பல் கர்நாடக மாநில மதுப் பாக்கெட்டுகளை உடைத்து சிதறடித்ததோடு, பணியாளர்களை மிரட்டியுள்ளனர். இதையெல்லாம் வீடியோவாக பதிவு செய்தும் சென்றுள்ளனர்.
அடுத்த நாளான 25 ஆம் தேதி மதியம் அந்த பெண்ணின் செல்போனிற்கு தொடர்பு கொண்ட சம்பத் என்பவர், “எனது கடை காரரை போலீஸ் பிடித்து கொண்டு சென்ற போது நீ என்ன கால் மேல் கால் போட்டுக் கொண்டு சிரிச்சியாமே, எங்களுக்கு Case போட்டு விக்கவே கூடாது என சொல்லி வெளியே அனுப்புறாங்க, உனக்கு மட்டும் எப்படி அனுமதி கொடுக்குறாங்க? என கேட்க அந்த பெண்ணும் “நான் ஏதும் செய்யல, அடுத்த மாதத்தில் இருந்து என்னையும் நிறுத்த சொல்லி இருக்கிறார்கள்” என கூற, அடுத்த மாதம் எல்லாம் கிடையாது இன்னைக்கு வித்தா இன்னைக்கும் அதே மாதிரி தான் நடக்கும் என மிரட்டும் தொனியில் பேசி ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “அனுமதி கொடுத்தால் இரண்டு கடைகளுக்கும் கொடுக்கட்டும் இல்லையென்றால், இரண்டு கடைகளையும் மூடவேண்டும் வேண்டும் என சம்பத் கூறியபோதுதான், வந்து பிரச்சனை செய்தது, அவரது கும்பல் என்பது தெரியவந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த உத்தனப்பள்ளி சாலையில் உள்ள உத்தனப்பள்ளி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கீரனப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கணவரை பிரிந்து வாழும் 35 வயது பெண். இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் சாமனப்பள்ளி கூட்ரோடு பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். மேலும் அதே கடையில் போலீசின் அரவணைப்போடு தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில மதுபாட்டில்களை வைத்து விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் சூளகிரி அடுத்த சாமல்பள்ளம் பகுதியை சேர்ந்த சம்பத் என்பவரும் அதே போலீசின் ஆதரவோடு கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியில் சப்படி செல்லும் சாலையில் கடையை வாடகைக்கு எடுத்து மது பாட்டில்களை விற்பனை செய்ய துவங்கியுள்ளார். அவரது கடையில் திடீரென ரெய்டு நடத்தியதால் கோபமடைந்த சம்பத், இளம்பெண்ணை மிரட்டியது ஆடியோ பேச்சின் மூலம் அம்பலமாகியுள்ளது. அதோடு, கள்ளச்சந்தையில் சரக்கு விற்பதற்கு போலீஸாரே லஞ்சம் வாங்கிக்கொண்டு அனுமதி கொடுத்ததும் இந்த ஆடியோ மூலம் அம்பலமாகியுள்ளது.
“குடிகாரர்கள் என்ன வேணுமுன்னாலும் சொல்லுவாங்க எதையும் நம்பாதீங்க, உங்களுக்கு அனுமதி வேண்டுமானால் நீங்க போலீஸ் கிட்ட தான் கேக்கணும். நான் என்ன செய்யட்டும்? கடவுள் சத்தியமாக நான் போலீஸ்கிட்டயோ, யார் கிட்டோயோ உங்களை பத்தி எதுவும் சொல்லல” எனக்கூறுகிறார் அந்த பெண்.
அதற்கு சம்பத், “நீயே போலீசில் பேசி அனுமதி வாங்கி குடு, இல்லையென்றால் நீயும் விற்க கூடாது” எனக்கூறியதுடன் “உனக்கு என்ன அவ்வளவு செல்வாக்கு உள்ளது, நீ 50 ஆயிரம் கொடுத்தால், நான் 1 லட்சம் கொடுக்க எனக்கு திறமை இருக்கு, கேஸ் போட்டு கடையை ஏன் நிப்பாட்ட சொன்னீங்கன்னு போலீசிடம் போய் கேளுங்க? என அந்த பெண்ணிடம் சம்பத் கேட்க சொல்வதும் அந்த ஆடியோவில் உள்ளது.
மேலும், “சிஐடி உனக்கு எஸ்.எஸ். தாபா கொடுக்குறான், ஆனா எனக்கு தேவையில்லை” எனவும், “அனுமதி கிடைக்காவிட்டால் 150 பேரை இறக்குவேன், வீடியோவையும் வெளியிடுவேன்” என சம்பத் மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அந்த பெண்ணும், “தமிழகத்தில் கர்நாடக மது பாட்டில்களை விற்க போலீசாரே அனுமதி கொடுத்து, மாதந்தோறும் லஞ்சம் வாங்கிக்கொண்டு, எரியாவை பிரித்து கொடுத்துள்ளனர். குடிகாரர்கள் சொல்வதை நம்ப வேண்டாம், அனுமதி வேண்டுமெனில் போலீசாரிடம் தான் பேச வேண்டும்” என ஆடியோவில் கூறியுள்ளார்.
இந்த தகவல் வெளிவந்ததன் மூலம், கள்ளச்சந்தையில் மதுவிற்பனைக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல், லஞ்சம் வாங்கி பாதுகாப்பு அளித்து வந்த போலீஸாரும் சிஐடி அதிகாரிகளும் சிக்கியுள்ளனர்.
பொதுமக்கள், “கள்ளச்சந்தை சட்டவிரோதம் என்றால் அதற்கு துணை நிற்பதே பெருங்குற்றம். சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்