தம்பதியின் தனிப்பட்ட வீடியோவை எடுத்து மிரட்டல் : இன்ஸ்பெக்டர் என கூறிய சித்தா டாக்டர் உள்பட 4 பேர் கைது

Four arrested, including a Siddha doctor, for threatening a couple with a secretly recorded private video while impersonating a police inspector.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காதல் தம்பதியின் தனிப்பட்ட வீடியோவை அவர்களுக்கு தெரியாமல் எடுத்து, அதை அடிப்படையாகக் கொண்டு பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்குடி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்த காதல் தம்பதியை, கடந்த 22ஆம் தேதி சிலர் ஜன்னல் வழியாக வீடியோ எடுத்தனர். பின்னர் அந்த வீடியோவை சமூக வலைதள நண்பர்கள் குழுவில் பகிர்ந்துள்ளனர்.

நேற்று முன்தினம், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ஒருவர் காவல்துறை இன்ஸ்பெக்டராக நடித்து, தொடர்ந்து புகார் வருவதாகக் கூறி காரில் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் தனிமையான இடத்தில் கார் நிறுத்தி, அந்த வீடியோவை காட்டி “இதை வெளியிடாமல் இருக்க ரூ.3 லட்சம் தர வேண்டும்” என்று மிரட்டியுள்ளார். தற்போது பணம் தர இயலாது என கூறியபோது, அடுத்த நாள் ரூ.20 ஆயிரம் பணத்தை கொண்டு வரவும், கணவரிடம் எதுவும் சொல்லாமல் தனிமையில் வர வேண்டும் என்றும் மிரட்டியுள்ளனர்.

இந்த விவரத்தை பெண் தனது கணவரிடம் தெரிவிக்க, இருவரும் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்திலும் ஏஎஸ்பியிடம் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, காரைக்குடி வைத்தியலிங்கம் பகுதியை சேர்ந்த கோகுல் சந்தோஷ் (21), பெரியார் நகரை சேர்ந்த 17 வயது சிறுவன், வீடியோவை நண்பர்களுக்கு அனுப்பிய முத்துபாண்டி (24), ஹரிஹரசுதன் (28) ஆகியோரை கைது செய்தனர். இவர்களில் ஹரிஹரசுதன் சித்தா டாக்டராக உள்ளார்.

கைது செய்யப்பட்ட 4 பேரின் செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் யாருக்கு யாருக்கு வீடியோவை அனுப்பியுள்ளனர் என்பது குறித்து சைபர் கிரைம் பிரிவின் உதவியுடன் விசாரித்து வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய இன்னும் 3 பேரை தேடிவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.