“வாக்கு வங்கி அரசியலுக்காக நாடகம் நடத்துவதை விஜய் நிறுத்த வேண்டும்” – பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பிரசாத் விமர்சனம்

BJP spokesperson Prasad criticizes actor Vijay, accusing him of staging political dramas for vote bank gains.

தமிழக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகர் விஜய் குறித்து கடும் விமர்சனம் இடம் பெற்றுள்ளது.

அதில், “நடிகர் விஜய் போன்ற இளைய தலைமுறையினரும், மக்களிடம் செல்வாக்கு பெற்றவர்களும் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது. அதனால்தான் பா.ஜ.க. அவர்களை வரவேற்றது. ஆனால், கட்சி தொடங்கிய ஒன்றரை வருடத்திலேயே திடீரென முதல்வராக கற்பனை செய்து கொண்டு, அரசியல் தராதரம் இல்லாமல், மிஷனரி வார் ரூமில் எழுதிக்கொடுத்த வசனத்தை மட்டுமே பேசும் போக்கு கண்டிக்கத்தக்கது” என கூறியுள்ளார்.

மேலும், “அண்ணா, எம்.ஜி.ஆர்., விஜயகாந்த் ஆகிய தலைவர்களை பாராட்டி, அவர்களது படங்களை போட்டு வைப்பதாலோ, கொள்கை தலைவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் உணராமல் செய்வதாலோ மக்கள் நம்பிக்கை பெற முடியாது. வாக்கு வங்கி அரசியலுக்காக நடத்தும் நாடகம் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, “விளம்பர அரசியலுக்காக பாரதிய ஜனதா கட்சியையும், புனிதமான ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தையும் விமர்சித்து, வெளிநாட்டு மிஷனரிகளை திருப்திப்படுத்தும் அரசியலை விட்டு விட வேண்டும். தமிழக வெற்றிக் கழகத்தையும், அதை நம்பிய இளைஞர்களையும் நல்வழியில் நடத்தும் மக்கள் நல அரசியல்வாதியாக விஜய் மாற வேண்டும்” என தனது அறிக்கையில் ஏ.என்.எஸ். பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.