
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு சாலைகளில் மழை நீர் தேங்கி பொதுமக்கள் அவதியடைந்தனர்.
இந்த நிலையில், சென்னை கண்ணகி நகரில் சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் மின்கம்பி அறுந்து விழுந்தது தெரியாமல், தூய்மை பணியாளரான வரலட்சுமி (30) அதில் கால் வைத்த போது மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
வரலட்சுமி இறப்பால் அப்பகுதி மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர். மேலும், ஒரு மகன், ஒரு மகளை கொண்ட அவரின் குடும்பத்தினர் திடீர் விபத்து காரணமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், உயிரிழந்த வரலட்சுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதில் மின்வாரியம் சார்பில் ரூ.10 லட்சமும், தனியார் தூய்மைப்பணி ஒப்பந்த நிறுவனம் சார்பில் ரூ.10 லட்சமும் வழங்கப்பட உள்ளன.
இந்த சம்பவத்தையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.