
தேர்தலுக்கு முன் திமுக அரசால் தாக்கல் செய்யப்படும் கடைசி முழு பட்ஜெட் என்பதால் மக்களை கவரும் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா?
மகளிர் உரிமை தொகை, புதுமை பெண் போன்ற மகளிருக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களின் உதவித் தொகை உயர்த்தப்படுமா?
2021ம் ஆண்டு அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகுமா ? என பெரும் எதிர்பார்புகளுக்கு மத்தியில் இன்று 2025-26-ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து இருக்கிறார்.
முன்னதாகவே தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இந்த பட்ஜெட்டை குறித்து வீடியோ ஒன்றை தனது X தளத்தில் வெளியிட்டார், அதில் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் உருவாக்கப்படுள்ளது என குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.
என்ற திருக்குறளை கூறி தனது உரை தொடங்கினார் நிதியமைச்சர் தென்னரசு.
முதல் அறிவிப்பாக
திருக்குறளை மேலும் 45 மொழிகளில் மொழிபெயர்க்க 133 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது, இதன்மூலம் ஐ.நா அங்கீகரித்துள்ள 193 மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட நூல் என்ற பெருமையை திருக்குறள் பெறும். மேலும் தலைசிறந்த 500 தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கீழடி,தெலுங்கனூர்,வெள்ளலூர்,ஆதிச்சனூர்,மணிக்கொல்லை,கரிம்வலம்வந்தநல்லூர்,பட்டணமருதூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 8 இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ள ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டங்களை போல உயர்கல்வி செல்லும் மூன்றாம் பாலின மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும்.
இந்த நிதியாண்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ 46,760 கோடியும் ,உயர்கல்வித் துறைக்கு ரூ8494 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு , அவர்களின் விருப்பத்திற்கேற்ப கைக்கணினி மற்றும் மடிக்கணினி வழங்கப்படும்.
இந்தாண்டு கலைஞர் உரிமை தொகை திட்டத்திற்காக ரூ.13,807 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,மேலும் இத்திட்டத்தில் புதியவர்கள் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும்.அதே போல் மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்திற்காக ரூ.3600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகையை சமாளிக்கும் வகையில் சென்னைக்கு அருகே 2000 ஏக்கர் பரப்பளவில் உலகத்தரம் வாய்ந்த நவீன வசதிகளுடன் கூடிய புதிய நகரம் உருவாக்கப்படும்.
போட்டி தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் சென்னை, கோவை, திருச்சி,தாம்பரம்,ஆவடி உள்ளிட்ட 30 மாநகராட்சிகளில் முதல்வர் படைப்பகம் அமைக்கப்பட உள்ளது.
தமிழ் நாட்டில் மேலும் பல செஸ் சாம்பியன்களை உருவாக்கும் வகையில், பள்ளிப் பாடத்திட்டத்தில் சதுரங்க விளையாட்டை சேர்த்திட, உடற்கல்விப் பாடத்திட்டத்தில் உரிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளது.
நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவு செய்யப்படுகிறது, அதற்காக ரூ.600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது..
ரூ.63,246 கோடி மதிப்பீட்டில் 119 கிலோமீட்டர் தூரத்திற்கு மூன்று வழித்தடங்களில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருவதாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான உயர்வழித்தடம் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என அறிவிப்பு
கோவையில் ரூ.10,740 கோடிக்கும், மதுரையில் ரூ.11,368 கோடியிலும் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் மத்திய அரசின் மூலாதன பங்களிப்பை பெறுவதற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை விமானநிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரையும், கோயம்பேடு முதல் ஆவடி வழியாக பட்டாபிராம் வரையிலும், பூந்தமல்லியிலிருந்து திரும்பெரும்புதூர் வழியாக சுங்குவார்சத்திரம் வரையும் நீட்டிக்கும் வகையில் விரிவான திட்ட அறிக்கைகள் பெறப்பட்டுள்ளதாகவும், விரைவில் மத்திய அரசின் மூலாதன பங்களிப்பிற்காக அனுப்பப்படும் எனவும் அறிவிகப்பட்டுள்ளது.
தாம்பரம் முதல் வேளச்சேரி வழியாக கிண்டி வரையும், கலங்கரை விளக்கத்திலிருந்து உயர்நீதிமன்றம் வரையும் மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிப்பதற்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என அறிவிப்பு
சென்னை-செங்கல்பட்டு- திண்டிவனம்- விழுப்புரம் வழித்தடம் உட்பட 3 வழித்தடங்களில் அதிவேக ரயில்வே அமைப்பை உருவாக்க விரிவான சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு.
மாமல்லபுரம், ஊட்டி, கொடைக்கானலில் ரோப்வே போக்குவரத்தை ஏற்படுத்த சாத்தியக்கூறுகள் ஆய்வுசெய்யப்படும்
மதுரை.கோயம்புத்தூர்,திருச்சி,சேலம்,திருப்பூர்,ஈரோடு,தூத்துக்குடி,தஞ்சாவூர், மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாநகராட்ச்சியில் .ரூ10. கோடி மதிப்பில் மூத்த குடிமக்களுக்காக 25 அன்புச்சோலைகள் அமைக்கப்படும்.
போன்ற அறிவிப்புகளை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டமன்றத்தில் அறிவித்தார்.
2025-26 ஆண்டிற்கான நிதிநிலை குறித்த முழுதகவலுக்கு தொடர்ந்து இனைந்திருங்கள்.