
மயிலாடுதுறை மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று மாவட்ட கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் பூம்புகார் தொகுதி எம்எல்ஏ மற்றும் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் நிவேதா முருகன் தலைமையேற்றார். சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட பொறுப்பாளர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தபோது, உட்கட்சி பூசல் காரணமாகவும், ஒப்பந்தப் பணிகளை கட்சியினருக்கு வழங்கவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து இருதரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், மாவட்டச் செயலாளர் நிவேதா முருகன் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்புக் குழுவினருக்கிடையே மோதல் வெடித்தது. இதனால் கூட்டத்தில் இருந்த சிலர் அலுவலகத்திலிருந்து வெளியே வந்து சாலையிலும் தள்ளுமுள்ளில் ஈடுபட்டனர்.
இந்த மோதலில் ஒரு நிர்வாகி ரத்தக்கறை படிந்த சட்டையில் வெளியே வந்து சண்டையில் ஈடுபட்டது பரபரப்பை மேலும் அதிகரித்தது. சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.