
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் (20). இவர் கடந்த 2020 மார்ச் 7–ஆம் தேதி, தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்துக்குப் பிறகு, இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு தப்பியுள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்ட நிலையில், பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது மருத்துவ பரிசோதனையில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது தெரியவந்தது. பெற்றோர் அளித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசார் அரவிந்தை கைது செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கை திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி காஞ்சனா விசாரித்தார். விசாரணை முடிவில், குற்றம் நிரூபணமானதை அடுத்து, அரவிந்துக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.