
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 500க்கும் மேற்பட்ட படுக்கைகள் கொண்ட பெரிய மருத்துவமனையாகச் செயல்பட்டு வருகிறது. புற நோயாளிகள், உள் நோயாளிகள் உள்ளிட்ட பிரிவுகளுடன் இயங்கும் இம்மருத்துவமனையில் தினசரி ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே சமயம், ஒப்பந்த அடிப்படையில் 300க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களும் இங்கு பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், இம்மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மை பணியாளர் மாலாவை, செவிலியர் மீரா கண்ணத்தில் அறைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, ஒரு அறையை சுத்தம் செய்ய மீரா, மாலாவிடம் கூறியதாகவும், அதனை மாலா கவனிக்காமல் சென்றதாகவும், இதனால் கோபமடைந்த மீரா அவளை கண்ணத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனை எதிர்த்து, அங்கு பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் அனைவரும் மருத்துவமனை வளாக தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், செவிலியர் மீரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களிடம் மருத்துவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அரசு மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மை பணியாளர் ஒருவரை செவிலியர் தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள சம்பவம், மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.