50க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோ – கேரள வாலிபர் கைது

"Kerala youth arrested for possessing and sharing obscene videos of more than 50 women."


கேரள மாநிலம் இடுக்கியைச் சேர்ந்த 24 வயது சஜு, திண்டுக்கல் நாகல் நகர் பகுதியில் வேலைசெய்து கொண்டிருந்த பெண்ணை, தனது வீட்டு வேலைக்காக காரில் அழைத்து சென்றுள்ளார். பின்னர், மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு கொண்டு சென்று, அந்த பெண்ணின் நகைகளை பறித்ததுடன், பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவத்தை தனது செல்போனில் பதிவு செய்தும் வைத்துள்ளார்

பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்ததைத் தொடர்ந்து, திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் சஜுவை தேடி வந்தனர். விசாரணையில் அவர் கேரளாவில் பதுங்கி இருப்பார் என சந்தேகப்பட்ட போலீசார், அங்கு சென்றபோது அவர் அர்னாடகாவில் இருப்பது தெரியவந்தது. அங்கு இருந்து மீண்டும் கேரளாவுக்கு திரும்பியபோது, போலீசார் அவரை கைது செய்தனர்.

சஜுவின் கைப்பேசிகளை பறிமுதல் செய்து சோதனை நடத்தியதில், 50க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், வேலைக்குச் செல்லும் பெண்களையும், தனியாக இருக்கும் பெண்களையும் குறிவைத்து, காரில் அழைத்துச் சென்று பலாத்காரம் செய்து, வீடியோ பதிவு செய்து, அதை காட்டி மிரட்டி மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்ததும், நகை மற்றும் பணம் பறித்ததும் வெளிச்சத்துக்கு வந்தது.

கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் இப்படிப் பட்ட குற்றங்களில் ஈடுபட்ட அவர், பல்வேறு சிம் கார்டுகள் மற்றும் செல்போன்களை பயன்படுத்தி, இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களுடன் பழகியதையும் போலீசார் கண்டறிந்துள்ளனர். மேலும், இந்தி பேசும் பெண்களின் வீடியோக்களும் இருப்பதால், அவர் பிற மாநிலங்களிலும் குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

முன்னதாக இடுக்கி மாவட்டத்தில் சிறை சென்ற அவர், பின்னர் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்துள்ளார். தற்போது சிறையில் உள்ள சஜுவை, காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். அவர் வலையில் மேலும் பல பெண்கள் சிக்கியிருக்கலாம் என போலீசார் எதிர்பார்க்கின்றனர்.