
திருச்சியில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் போஸ்ட் உமனாக பணியாற்றி வரும் 25 வயது பெண், கடந்த 8ஆம் தேதி காலை 9 மணியளவில் பணி காரணமாக தனது டூ வீலரில் பொன்மலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த 32 வயது ஆண் ஒருவர், டூ வீலரை இளம்பெண் சென்ற வாகனத்தின் முன் குறுக்கே நிறுத்தினார்.
தொடர்ந்து, அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதிர்ச்சி அடைந்த பெண் கூச்சலிட்டதால், அவர் அங்கிருந்து தப்பி ஓடினார். சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண், பொன்மலை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, குறித்த நபர் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே காணக்கிளியநல்லூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் போலீஸ்காரர் கோபாலகிருஷ்ணன் (32) என தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.