
டெல்லியில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் 32 லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தியது டெல்லி அணி.
ஐபிஎல் போட்டியின் 32 வது லீக் ஆட்டமான ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி அணி இடையிலான போட்டி நேற்று டெல்லியில் நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட் செய்யுமாறு டெல்லியை அழைத்தது. டெல்லி அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக அபிஷேக் பொரேல் மற்றும் ஜேக் பிரேசர் மெக்கர்க் ஆகியோர் களமிறங்கினர்.
அதிரடியாக தொடங்கிய மெக்கர்க் இந்த முறையும் சோபிக்க தவறி மூன்றாவது ஓவரிலேயே விக்கெட்டை இழந்து வெளியேறினார். கடந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய கருண் நாயர் கோல்டன் டக்கில் ரன் அவுட் ஆகி டெல்லி ரசிகர்களுக்கு பெறும் அதிர்ச்சியை அளித்தார். இருப்பினும் அடுத்ததாக ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் மற்றும் அபிஷேக் பொரேல் சீராக விளையாடி ரன்களை குவித்தனர். ஃபவர் பிளே முடிவில் 2விக்கெட் இழப்பிற்கு 46 ரன்களை எடுத்தனர்.
நிதானமாக விளையாடி வந்த கேஎல் ராகுல் ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய 12 ஓவரில் தூக்கி அடிக்க முயன்று விக்கெட்டை இழந்து வெளியேறினார். அடுத்ததாக வந்த ஸ்டப்ஸ் நிதானமாக விளையாடினாலும் மறுபுரம் விக்கெட் விழ தொடங்கியது, அதன் பின் களத்திற்கு வந்த அக்ஷர் பட்டேல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் மூலம் ரன் குவிக்கும் வேகமும் உயர்ந்தது, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்களை டெல்லி அணி சேர்த்தது.
189 என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக விளையாடி சிக்சர் மற்றும் பவுண்டரிகளுக்கு மட்டுமே பந்தை விளாசினர்கள். சிறப்பாக விளையாடி வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் திடிரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் ரிட்டயர் ஹர்ட் மூலம் வெளியேறினார். அடுத்த வந்த ரியான் பராக் 8 ரன்களில் அக்சர் பட்டேல் வீசிய ஓவரில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார்.
4 வது விக்கெட்டுக்கு இணைந்த ஜெய்ஸ்வால் மற்றும் நித்திஷ் ராணா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜெய்ஸ்வால் 34 பந்துகளில்51 ரன் எடுத்த நிலையில், குல்தீப் வீசிய ஓவரில் தூக்கி அடிக்க முயன்று விக்கெட்டை இழந்து வெளியேறினார். மேலும் நித்திஷ் ராணாவும் 26 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து நிலையாக இருந்த போதிலும் மிட்செல் ஸ்டார்க் வீசிய 17வது ஓவரில் விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
ராஜஸ்தான் அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன, களத்தில் துருவ் ஜூரெல் மற்றும் ஹெட்மயர் இருந்தனர், இருவரும் பெரிய ஷாட்களை அடிக்கும் திறமை கொண்டவர். இருப்பினும் மிட்செல் ஸ்டார்க் மிகச் சிறப்பாக முதல் 5 பந்துகளையும் யார்க்கர் பந்துகளாக வீசி 7 ரன்களை மட்டுமே கொடுந்திருந்தார். கடை ஒரு பந்தில் 2 ரன்கள் தேவை எனும் பட்சத்தில், அந்த பந்தையும் ஸ்டார்க் யார்க்கராகவே வீசிய நிலையில் துருவ் ஜூரெல் அடித்து விட்டு 2வது ரன்னிற்கு ஓடும் பொழுது ரன்அவுட் ஆகவே ஆட்டம் டிராவில் முடிந்தது.
ஐபிஎல்லில் நான்கு வருடங்களுக்கு பிறகு சூப்பர் ஓவர் போட்டி நடைபெறுவதால் ரசிகர்கள் பெறும் ஆவலுடன் காத்திருந்தினர்.
சூப்பர் ஓவரில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 11 ரன்களை சேர்த்தது. 12 ரன்கள் இலக்கு என களமிரங்கிய டெல்லி அணி முதல் 4 நான்கு பந்திலியே இலக்கை எட்டிப்பிடித்து டெல்லி அணி போட்டியில் வென்றது.