
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பகுதிக்கு அருகிலுள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, ரகசிய தகவலின் பேரில் போலீசார் பல இடங்களில் அதிரடி சோதனைகள் நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இரண்டாம் கட்டமாக மாவட்ட எஸ்பி தலைமையில் 30க்கும் மேற்பட்டோரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்தனர். இதில், சிலரின் மொபைல் எண்களை சோதனையிட்டதில், அவர்கள் பல மாணவர்களுக்கு போதை மாத்திரை மற்றும் ஊசிகள் விற்றது தெரியவந்தது.
சம்பந்தப்பட்ட மூன்று பேரிடமிருந்து 450க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பலர் இதில் தொடர்புடையவர்கள் இருக்கலாம் என்பதால், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வேலூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.