
திருவண்ணாமலை காந்தி நகர் மத்திய கூட்டுறவு வங்கி கிழக்கு கிளையில், மங்கலம் அருகே கருமாரபட்டி கிராமத்தை சேர்ந்த ராமதாஸ் மற்றும் அரடாப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஏழுமலை ஆகியோர் கடந்த ஆண்டு கவரிங் நகைகளை அடமானம் வைத்து பணம் பெற்றனர்.
பின்னர், இருவரும் வங்கி மேலாளர் மற்றும் நகை மதிப்பீட்டாளருடன் ரகசியமாக பேசி, 20-க்கும் மேற்பட்டோரின் பெயரில் கவரிங் நகைகளை அடகு வைத்து சுமார் ₹3 கோடி ரூபாய் பெற்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு, கூட்டுறவு வங்கியின் தணிக்கை பிரிவு அதிகாரிகள் கிளையில் ஆய்வு நடத்தினர். அப்போது, 22 பேரின் பெயரில் கவரிங் நகைகள் வைத்து ரூ.3 கோடி மோசடி நடந்தது கண்டறியப்பட்டது. இதற்கு வங்கி மேலாளர் விஜயலட்சுமி, நகை மதிப்பீட்டாளர் கோபிநாதன், வங்கி ஊழியர்கள் உடந்தையாக இருந்ததாக பொருளாதார குற்றப்பிரிவுக்கு புகார் அளிக்கப்பட்டது.
விசாரணையில், மோசடி நடந்தது உறுதியானதை அடுத்து, போலீசார் மேலாளர் விஜயலட்சுமி, நகை மதிப்பீட்டாளர் கோபிநாதன், ஏஜென்டு ஏழுமலை ஆகிய மூவரையும் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும், உடந்தையாக இருந்த ராமதாஸ், கவரிங் நகைகளை வைத்து பணம் பெற்ற 20 பேர் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.