
வேலூர் மாநகர் பெரிய அல்லாபுரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பிரியாணி கடையில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் குமார் (23) கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலை செய்து வந்தார்.
ஆகஸ்ட் 8ஆம் தேதி காலை, கடையில் இஞ்சி பூண்டு அரைக்கும் பணியில் இருந்த அவர், திடீரென இயந்திரத்தில் ஏற்பட்ட மின்சாரம் தாக்கி துடிதுடித்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
தகவல் கிடைத்ததும், பாகாயம் காவல்துறையினர் விரைந்து வந்து உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறை வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. அதில், செந்தில் குமார் இயந்திரத்தில் இஞ்சி பூண்டு அரைக்கும் போது திடீரென மின்சாரம் தாக்கி துடித்துவிழ, உடன் இருந்த சக ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்து அவரை மீட்க முயற்சிப்பது பதிவாகியுள்ளது. இந்த காட்சி பார்ப்போரை பதைபதைக்க வைத்துள்ளது.
போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.