
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட கோமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராமையன் (60), ஓய்வு பெற்ற கூட்டுறவுத்துறை ஊழியர். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் கவியரசன், திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இளைய மகன் கலைவாணன், கந்தர்வகோட்டை அருகே கல்லாக்கோட்டையில் உள்ள தனியார் மதுபான ஆலையில் வேலை செய்கிறார்.
நேற்றுமுன்தினம் இரவு, ராமையன் காற்றுக்காக பின்பக்க கதவை திறந்தபடி குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, நள்ளிரவில் முன்பக்க காம்பவுண்ட் சுவரை ஏறி, 3 மர்மநபர்கள் பின்புறம் வழியாக வீட்டிற்குள் புகுந்தனர். அங்கு தூங்கிக் கொண்டிருந்த ராமையனின் மனைவி லட்சுமியின் 5 பவுன் தாலி செயினையும், மாமியார் பவுனம்பாளின் 4 பவுன் தாலி செயினையும் பறித்து சென்றுள்ளனர்.
அவர்களின் அலறல் சத்தம் கேட்டு எழுந்த ராமையனை, மர்மநபர்கள் உருட்டு கட்டையால் தலையில் பலத்த காயம் ஏற்படும் வகையில் தாக்கிவிட்டு தப்பி ஓடினர்.
புகார் கிடைத்ததும், கந்தர்வகோட்டை போலீசார் விரைந்து வந்து, ராமையனை கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.