
சிதம்பரம் கோவில் தெருவைச் சேர்ந்த ராணி (61) என்பவர், தனது மகன் மணிகண்டனுடன் சென்னையில் வசித்து வந்தார். கடந்த 6-ஆம் தேதி நள்ளிரவு, சென்னையிலிருந்து மன்னார்குடி செல்லும் மண்ணை விரைவு ரயிலில், சிதம்பரத்திற்கு செல்வதற்காக இருவரும் பயணம் செய்துள்ளனர்
பின்னர் இன்று 7-ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் ரயில் சிதம்பரம் ரயில் நிலையத்தின் முதல் நடைமேடையில் வந்து நின்ற போது ரயிலில் இருந்த ராணி, இறங்க தயாரானபோது கதவைத் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. ரயில் நகரத் தொடங்கியதும், பின்னால் நின்ற ஒருவர் கதவை திறந்ததையடுத்து, ராணி இறங்க முயன்றுள்ளார்
வண்டி மெதுவாக நகரும் நிலையில், நடைமேடையில் கால்வைப்பதற்குப் பதிலாக, நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடைவேளையில் ராணி தவறி விழுந்தார். இதையடுத்து, அவர் மீது ரயில் சக்கரம் ஏறியதால், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து, ரயில் நிறுத்தப்பட்டு அவரது உடல் வெளியே எடுக்கப்பட்ட பின்னர் மீண்டும் ரயில் பயணத்தைத் தொடர்ந்தது. சம்பவம் குறித்து சிதம்பரம் இருப்புப்பாதை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராணியின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சோகமான சம்பவம் சிதம்பரம் பகுதியில் பெரும் சிலைமை மற்றும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.