2026 ல் திறக்கப்பட போகும் ஓசூர் அவுட்டர் ரிங் ரோடு! – முழுமையான தகவல்களுடன் ஒரு பார்வை

"Hosur Outer Ring Road project set to open in 2026 – full details and overview"

ஓசூர் நகரின் போக்குவரத்து நெரிசலை குறைத்து, சென்னை – பெங்களூரு பாதையில் அதிவேகமாக பயணத்தை மேற்கொள்வதற்கென ‘ஓசூர் அவுட்டர் ரிங் ரோடு’ திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த திட்டம் கடந்த 2016ஆம் ஆண்டு, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் தொடங்கப்பட்டது. பின்னர், கொரோனா பாதிப்பு, ஆட்சி மாற்றம் போன்ற காரணங்களால் தாமதமான இந்தப் பணிகள் தற்போது திமுக ஆட்சியில் மீண்டும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, இந்த திட்டத்திற்கு ரூ.320 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதில்,

  • நிலம் கையகப்படுத்துதலுக்கு – ரூ.215 கோடி
  • கட்டிட பணிகள் – ரூ.85 கோடி
  • உள்கட்டமைப்புகளை மாற்ற – ரூ.15 கோடி
  • எதிர்பாராத செலவுகளுக்கு – ரூ.5 கோடி என திட்டமிடப்பட்டுள்ளது.

01 .வழித்தடங்கள் எப்படி அமைக்கப்படுகின்றன என்பது தொடர்பான விவரம்

இந்த ரிங் ரோடு திட்டம், ஜூஜூவாடி கிராமத்திலிருந்து (கர்நாடகா எல்லை அருகே) பேரண்டஹள்ளி கிராமம் வரை 18.40 கிமீ தொலைவில் கட்டப்படும். இது கிரீன்ஃபீல்டு பைபாஸ் சாலையாக அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் பணிகள் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு கழகம் (TNRDC) மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் மத்திய, மாநில அரசுகள் இணைந்து இந்த சாலை அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீட்டை பகிர்ந்துகொள்கின்றன.

இதற்காக 11 கிராமங்களில் உள்ள 60.16 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. இந்த நிலங்களை கையகப்படுத்தும் போது, உரிமையாளர்களுக்கு சந்தை மதிப்புக்கு மேல் 30% இழப்பீடு மற்றும் மீள்குடியேற்ற வசதிகளும் வழங்கப்படும் என கூறப்படுகின்றது


02. ரிங் ரோடு திட்டத்தின் தொழில்நுட்ப அம்சங்கள்

ஓசூர் அவுட்டர் ரிங் ரோடானது நான்கு வழிச்சாலையாக அமைக்கப்படுகிறது. மேலும் அவசியம் ஏற்பட்டும் இடங்களில் இருபுறமும் சர்வீஸ் சாலைகள் ஏற்படுத்தப்படும். சாலையின் அகலம் 45 மீட்டர் முதல் 60 மீட்டர் வரையிலான பரப்பளவில் நிர்மாணிக்கப்படுகிறது. இதன் வழியாக மணிக்கு 80 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தில் வாகனங்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதையில் ஒரு நாளில் 40,000க்கும் அதிகமான வாகனங்கள் பயணிக்கக்கூடிய திறன் கொண்டதாக திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், சிக்னல் இல்லா மேம்பால வசதி இத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் இரண்டு பெரிய மேம்பாலங்கள் மற்றும் ஆறு சிறிய மேம்பாலங்கள் கட்டப்படுகின்றன. மேம்பாலங்களின் கீழ் உள்ள பகுதிகளில் கிளை சாலைகள், பாதசாரிகள் நடைபாதைகள் மற்றும் மழைநீர் வடிகால் வசதிகள் உள்ளிட்ட ஒருங்கிணைந்த உள்கட்டமைப்புகளும் விரிவாக திட்டமிடப்பட்டுள்ளன.

03. இந்த திட்டத்தின் தற்போதைய நிலவரம் மற்றும் எதிர்கால நோக்கங்கள்

ஆகஸ்ட் 2025 நிலவரப்படி, நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு, அனைத்து கிராமங்களிலும் சர்வே பணிகள் முடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கைகள் தயாரிக்கப்படுகின்றன. அடுத்த கட்டமாக டெண்டர் அறிவிப்புகள் வெளிவர உள்ளன.

திட்டத்தின் முழுப் பணிகள் 2026 இறுதிக்குள் முடிவடைந்து, சாலை பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


04. அவுட்டர் ரிங் ரோடு திட்டதினால் ஏற்பட போகும் நன்மைகள்

ஓசூர் அவுட்டர் ரிங் ரோடு திட்டம் நிறைவேறும் போது பல்வேறு முக்கியமான பயன்களை வழங்கும். முதன்மையாக, ஓசூர் நகருக்குள் நிலவும் போக்குவரத்து நெரிசலை இது முற்றிலும் குறைக்கும் என எதிரபார்க்கப்படுகின்றது . இதன் மூலம் சரக்கு வாகனங்கள் நகருக்குள் நுழையாமல் வேறு வழியை பயன்படுத்தி இயக்கப்படக்கூடியதாக மாறும்.

மேலும், தமிழகத்தின் மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் இருந்து பெங்களூரு நோக்கிச் செல்லும் பயணிகள், ஓசூர் வழியாக நகரத்தை கடக்காமல் நேரடியாக பயணிக்கக்கூடிய வசதி கிடைக்கும். தொழில் ரீதியான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடவடிக்கைகள் அதிகரிக்கும் வகையில் இந்த சாலை ஒரு முக்கிய ஒட்டுமொத்தக் கொள்கைப் பாதையாக அமையும். குறிப்பாக, சிப்காட் உள்ளிட்ட தொழிற்பேட்டைகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விரிவான போக்குவரத்து வசதிகள் ஏற்படுவதால், தொழில்துறையின் வளர்ச்சிக்கும் இது உதவியாக இருக்கும்.

இத்துடன், எதிர்கால திட்டங்களில் ஓசூர் சர்வதேச விமான நிலையத்துடன் இந்த ரிங் ரோடு இணைக்கப்படும் வகையில் செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனுடன் தர்மபுரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு விரைவான போக்குவரத்து வசதி கிடைக்கும். மேலும், இந்த அவுட்டர் ரிங் ரோடு திட்டம், பெங்களூரு சாட்டிலைட் ரிங் ரோடு சாலையுடன் இணைக்கப்படுவதற்கான முன்னோட்ட நடவடிக்கைகளும் திட்டமிடப்பட்டுள்ளன.

அதனால் ஓசூர் அவுட்டர் ரிங் ரோடு திட்டம் நிறைவேறினால், தமிழகத்தின் முக்கிய வீதி கட்டமைப்புகளில் ஒன்றாக இந்த திட்டம் உருவாகும். மேலும் தொழில்துறைக்கும், பொதுமக்கள் பயண வசதிக்கும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் பெரிதாக எதிரபார்க்கப்படுகின்றது