
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் வனப்பகுதி அமைந்துள்ளதால், அப்பகுதியில் வனவிலங்குகள் வசிப்பது இயல்பானதாயுள்ளது. இதன் காரணமாக வனவிலங்குகள் அவ்வப்போது மக்கள் குடியிருக்கும் பகுதிகளிலும் விவசாய நிலங்களிலும் புகுந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக மாறி வருகிறது.
இந்நிலையில், இன்று (07.08.2025) அதிகாலையில் புளியங்குடியில் உள்ள விவசாய நிலத்திற்குச் சென்ற அம்பிகாபதி, ராமலட்சுமி, சிவமாலை ஆகிய மூன்று பெண்கள் மீது, எதிர்பாராத விதமாக அங்கு வந்த கரடி ஒன்று தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலால் மூவரும் படுகாயம் அடைந்தனர்.
உடனே அருகிலிருந்த உறவினர்களுக்கு அவர்கள் தகவல் அளித்ததைத் தொடர்ந்து, மூவரும் உடனடியாக மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதில், கரடி கடித்ததால் மண்டை ஓட்டுப் பகுதியில் தீவிர காயம் ஏற்பட்ட சிவமாலை என்பவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல்சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக புளியங்குடி மற்றும் சுற்றுவட்டாரத்தில் மக்கள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து கவலையுடன் கருத்து தெரிவித்த அப்பகுதி விவசாயிகள், “வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில், கடந்த சில மாதங்களாக தொடர்ந்து புகார் தெரிவித்தும் வனத்துறையால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது கரடி தாக்குதல் உயிருக்கு ஆபத்தாக மாறி விட்டது. எனவே இனிமேலும் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாத வகையில் உடனடி மற்றும் தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினர்.