
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதியில் சுமார் 3 வாரங்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பான புகாரை விசாரிக்க கலசப்பாக்கம் காவல் நிலையம் செயல்பட்டு வந்தது. இதில் விபத்து மரணம் என பதிவு செய்யவும், தொடர்புடைய CSR நகலை வழங்கவும், சம்பந்தப்பட்ட கார் ஓட்டுநரிடம் சிறப்பு உதவி ஆய்வாளர் கோவிந்தன் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில் கோவிந்தன் 10,000 ரூபாய் லஞ்சமாக கோரியதாகவும், அதில் முதலில் 7,000 ரூபாயை வாங்கும் போது எடுத்துக்கொள்ளப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. மீதமுள்ள 3,000 ரூபாயை வழங்கிய பின்னரே விசாரணை மற்றும் பதிவு ஆகியவற்றை மேற்கொள்வதாக கூறும் கோவிந்தனின் உரையாடலும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
இந்த வீடியோ வெளியாகி உள்ளதையடுத்து, மாவட்ட காவல்துறை மத்தியிலும் பரபரப்பு நிலவுகிறது. பொதுமக்கள் மத்திலும் அதிர்ச்சி மற்றும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.