இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக கூறப்பட்ட நிலையில் கணவனே கொலை செய்தது அம்பலம்

"News image showing investigation of a young woman's death, initially reported as suicide but later revealed to be murder by her husband."


நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகேயுள்ள மேல்முகம் கிராமத்தைச் சேர்ந்த தனபால் (44), விசைத்தறி கூலி தொழிலாளி. அவருக்கு மனைவி கீதா (33) மற்றும் 8 மற்றும் 3 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

குடிப்பழக்கம் கொண்ட தனபால், அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் மனைவியுடன் தகராறு செய்வது வழக்கமாக இருந்தது. இந்தத் தகராறு கடந்த சில மாதங்களாக தொடர்ந்த நிலையில், கடந்த 3ம் தேதி இரவு கீதா வீட்டில் உள்ள அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

தகவல் அறிந்த மல்லசமுத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, சடலத்தை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

ஆனால், கீதாவின் உடலில் காயங்கள் காணப்பட்டதை அடுத்து அவரது சகோதரி பிரியங்கா, இது தற்கொலை அல்ல என சந்தேகம் தெரிவித்தார். “தங்கைக்கு அடிக்கடி கணவரால் தாக்குதல் நடப்பதாக அவர் என்னிடம் தெரிவித்து வந்தார். உடலில் கால், தலையில் காயங்கள் உள்ளன” என அவர் புகார் அளித்தார்.

இந்நிலையில், நேற்று மதியம் தனபால் மல்லசமுத்திரம் காவல் நிலையத்தில் சரணடைந்து, உண்மையை ஒப்புக் கொண்டார். விசாரணையில் தனபால் தெரிவித்ததாவது:

“கீதா கடந்த மாதம் 27ம் தேதி சிக்கமங்களூரில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு சென்றிருந்தார். அந்த இடைவெளியில் அவர் வளர்த்து வைத்த பசுமாடு மற்றும் கன்றை நான் விற்றுவிட்டேன். ஆகவே, 2ம் தேதி அவர் வீடு திரும்பியதும், இதைப் பற்றி வாக்குவாதம் ஏற்பட்டது. 3ம் தேதி இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டதில், ஆத்திரமடைந்து அவரது தலையை தரையில் மோதினேன். பின்னர் துணி துண்டால் கழுத்தை நெரித்து கொன்றேன். இச்சம்பவத்தை மறைக்க அவரை தூக்கில் தொங்கவிட்டேன். ஆனால் தற்போது பயம் அதிகரித்து விட்டதால், நேரில் வந்து சரணடைந்தேன்.” என தெரிவித்துள்ளார்

தனபால் மீது கொலைக்குற்றம் பதிவு செய்த போலீசார், அவரை திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

இச்சம்பவம் மேல்முகம் பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.