
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டத்தில், அப்பா, மகன் உள்ளிட்ட 4 பேருக்கு மத்தியில் நேற்று இரவு கடும் மோதல் ஏற்பட்டதாக தகவல் கிடைத்தது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு எஸ்.ஐ. சண்முகவேல் மற்றும் ஒரு காவலர் விரைந்து சென்று மோதலை களைப்பதற்காக சமாதானம் பேச முயன்றுள்ளனர். ஆனால் அப்போது, வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் இருந்தவர்கள், திடீரென எஸ்.ஐ. சண்முகவேலை தாக்கி கொலை செய்தனர்.
இந்த சம்பவம் போலீசாரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தகவல் கிடைத்தவுடன் உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் விசாரணை துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
மதுபோதையில் இருந்த சந்தேக நபர்கள், திட்டமிட்டு எஸ்.ஐ.யை வரவழைத்தார்களா? அல்லது சம்பவத்தில் ஏற்பட்ட குழப்பத்தில் கொலை நடந்ததா? என்பதற்கான விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக, முக்கிய சந்தேக நபர்களான மணிகண்டன், அவரது தந்தை, சகோதரர் உள்ளிட்டோர் தற்போது தலைமறைவாக உள்ளதாக தெரிகிறது. இவர்களை கைது செய்ய 6 தனிப்படை போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு, திருப்பூர் மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றன.
பொதுமக்கள் மற்றும் போலீசாரிடையே கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.