
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஏ.அத்திப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் நைனா (78). இவர் அந்த கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராவார். கடந்த சில நாட்களாக இவருக்கும் அவரது தம்பி மனைவி சரிதாவுக்கும் நிலம் தொடர்பாக தகராறாரு இருந்ததாக கூறப்படுகின்றது
இந்தத் தகராறு தொடர்பாக சரிதா திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து காவல் ஆய்வாளர் இளையராஜா தலைமையிலான போலீசார் இரு தரப்பையும் விசாரணைக்கு அழைத்துள்ளனர். ஆனால், போலீசார் நைனாவை மிரட்டி, மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த மன அழுத்தத்தின் காரணமாக, இன்று (ஆ.5) காலை தனது நிலத்தில் நைனா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த மூன்று பக்க உருக்கமான கடிதத்தில், போலீசாரின் துன்புறுத்தலே தற்கொலைக்குக் காரணம் எனவும், பொய்யான புகாரின் அடிப்படையில் தன்னை அடிக்கடி அழைத்து மிரட்டியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
தகவல் அறிந்ததும், திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நைனாவின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நைனாவின் மனைவி பழனியம்மாள் அளித்த புகாரின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் இளையராஜா உட்பட 7 பேர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் காவல் ஆய்வாளர் முதன்மைக் குற்றவாளியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.
சம்பவத்தை தொடர்ந்து ஏ.அத்திப்பாக்கம் கிராமம் மற்றும் மருத்துவமனை வளாகத்தில் போலீசார் கணிசமான அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நைனாவின் உறவினர்கள், கடிதத்தில் குறிப்பிடப்பட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.