
சென்னை தண்டையார்பேட்டை, நெடுஞ்செழியன் நகரைச் சேர்ந்த வேலு என்பவரது வீட்டில், கடந்த 3 மாதங்களாக ராஜா என்ற ஆட்டோ ஓட்டுநர் குடியிருந்து வருகிறார். ராஜாவின் 7 வயது மகள் ஸ்மித்திகா ஶ்ரீ நேற்று (ஆ.4) வீட்டின் அருகிலுள்ள கடைக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த போது, வீட்டு வாசலில் கட்டி வைக்கப்பட்டிருந்த ராட்விலர் நாய் எதிர்பாராதவிதமாக குழந்தையை கடித்துள்ளது
அந்த நாய் சிறுமியின் முகத்தில் கடித்து குதறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைக் கண்ட சிறுமியின் தந்தை ராஜா, உடனடியாக , மகளை நாயிடம் இருந்து மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
முகத்தில் பலத்த காயங்களுடன் சேர்க்கப்பட்ட சிறுமிக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆர்.கே.நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு, வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதிக ஆபத்தான வகையான ராட்விலர் நாயை பாதுகாப்பு இல்லாமல் வைத்ததற்கான காரணம், பாதுகாப்பு வழிமுறைகள் உள்ளிட்டவற்றை மையமாக வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.