“வழக்கறிஞர்கள் தான், அப்படித்தான் செய்வோம்!”- 22 வயது பெண்ணிடம் பாலியல் சீண்டல்

"22-year-old woman faces sexual harassment by men claiming to be lawyers."


சென்னை பெசன்ட் நகர் கடற்கரைக்கு நேற்று நண்பர்களுடன் வந்திருந்த 22 வயதான ஐடி நிறுவன பெண் ஊழியர், கடைக்குப் பக்கமாக நண்பர்களுடன் நின்றிருந்தார்.

அந்த நேரத்தில் குடிபோதையில், வழக்கறிஞர்களைக் கொண்ட ஆறு பேர் கொண்ட குழு அப்பகுதியாக வந்தது. அவர்களில் ஒருவர், அப்பெண்ணிடம் அத்துமீறி உடலைத் தொடும் வகையில் மோசமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதைக் கண்ட பெண் அவரை நேரில் தட்டிக்கேட்டபோது, “நாங்கள் வழக்கறிஞர்கள், அப்படித்தான் செய்வோம், என்ன செய்வாய்?” என மிரட்டியதாகவும், அதை மற்ற உறுப்பினரும் ஆதரித்ததாகவும் தெரிய வந்துள்ளது.

திடுக்கிட்ட அந்த பெண் அருகில் இருந்த காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தொடர்புகொண்டு புகார் அளித்தார். தகவலுக்கிணங்க சாஸ்திரி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் சாய்கிரிதரன் (24) என்பவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச்சென்றனர்.

மேலும், சம்பந்தப்பட்டவர்கள் போலீசரிடம் கூட “நாங்கள் வழக்கறிஞர்கள்தான்” என வாதிட்டுள்ளனர்.

பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், பாலியல் தொந்தரவு உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் சாய்கிரிதரனை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த சம்பவம் பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.