
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகேயுள்ள கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதம்பியின் மகன் முகிலன் (வயது 16), திருப்பத்தூரில் உள்ள தோமினிக் சாவியோ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருவதுடன், விடுதியில் தங்கி வந்தார்.
இந்தநிலையில் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி மாணவன் காணாமற் போனதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து, திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அதன்பின் கடந்த 3-ம் தேதி காலை பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு பழைய கிணற்றில் முகிலனின் உடல் மிதந்தபடி காணப்பட்டது. உடலில் காயங்கள் இருந்ததாக கூறப்பட்டதால், மாணவன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து, முகிலனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் – பள்ளி நிர்வாகத்தினரை கைது செய்யக் கோரி போராட்டங்களில் ஈடுபட்டனர். வேலூரில் இருந்து வந்த டாக்டர் பாலாஜி தலைமையிலான குழுவினர் பிரேத பரிசோதனை செய்தபோதும், “கோரிக்கைகள் நிறைவேறும் வரை உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம்” என உறவினர்கள் கூறினர்.
போலீசார், “பிரேத பரிசோதனை அறிக்கை வர 2–3 நாட்கள் ஆகும்; அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதி அளித்தனர். அதன் பிறகு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உறவினர்கள் உடலை வாங்க சம்மதம் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மாணவன் படித்த பள்ளிக்கு 2-வது நாளாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தை சுற்றி பாதுகாப்புப் பணியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.