
தூத்துக்குடி மாவட்டம் திசையன்விளையைச் சேர்ந்த உருமங்குளம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 37). மினிபஸ் ஓட்டுநராக பணியாற்றும் இவர், திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், அந்த திருமணத்தை மறைத்து, 6 ஆண்டுகளுக்கு முன்பு மருந்தகத்தில் பணியாற்றி வந்த ஜாய்ஸ் (30) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டு, தேரியூர் ஆண்டிவிளை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவர்களுக்கு இரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், ஜாய்ஸ் ஒருவருடன் செல்போனில் அதிகம் பேசுவதாகக் கூறி சந்தேகப்பட்ட முத்துக்குமார், மனைவியை அடித்து, அடிவயிறு உள்ளிட்ட உடலின் பல பகுதிகளில் சூடு வைத்து சித்திரவதை செய்துள்ளார். மேலும், சில வாரங்களுக்கு முன்பு அவருக்கு மொட்டையடித்தும் உள்ளார்.
இந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி அதிகாலையில், ஜாய்ஸ் மயக்கமடைந்த நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், தலையில் காயத்துடன் இருந்த ஜாய்ஸை இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் தகவல் வழங்கியதால், குலசேகரப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடலை கைப்பற்றி தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.
கூடவே, ஜாய்ஸின் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்ட வருவாய் கோட்டாட்சியர் மற்றும் போலீசாரிடம் நாடகமாடிய முத்துக்குமாரிடம், தீவிர விசாரணையின் போது உண்மை வெளிவந்தது.
மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் சண்டையிலே தன் மனைவியின் கழுத்தை நெரித்து, பூரிக்கட்டையாலும் இரும்புக் கம்பியாலும் தலையில் தாக்கியதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து, முத்துக்குமாரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வழக்குப் பதிவு செய்துள்ளனர். காதல் திருமணத்தில் இணைந்த மனைவியை கொடூரமாக சித்திரவதை செய்து கொன்ற சம்பவம் திருச்செந்தூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.