
திருவள்ளூர் மாவட்டம் நுங்கம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கம்மார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமி { தாயுடன் } அவரது இரு மகன்கள் விக்னேஷ் (26) மற்றும் கணேஷ் (24) வாழ்ந்து வந்தனர். கணேஷ் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த நிலையில், அங்கு பணியாற்றும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அறிந்த தாய் ஜெயலட்சுமி, அந்த உறவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டித்தார். இதனிடையே, மூத்த மகன் விக்னேஷ், அடிக்கடி நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி வீட்டிற்கு வந்து கொண்டிருந்ததாகவும் தெரிகிறது.
இருவரது செயலும் தாயின் மனஅழுத்தத்திற்கு காரணமானது. கடந்த ஜூலை 25ஆம் தேதி இரவு, “என் பேச்சு கேட்காமல் நீங்க நடந்தால் நான் ஏன் உயிரோடு இருக்க வேண்டும்?” என கூறிய ஜெயலட்சுமி, கையில் வைத்திருந்த விஷத்தை அருந்த முயன்றார். அதைப் பார்த்த மகன்கள், தாயின் கையிலிருந்து விஷம் பிடுங்கி இருவரும் குடித்துள்ளனர்
அவர்கள் கீழே விழுந்ததும் தாயின் அலறலைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து இருவரையும் முதலில் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
அங்கு கணேஷ் நேற்று உயிரிழந்தார். இன்று விக்னேஷும் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக மணவாளநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாயின் எதிர்ப்பும், மகன்களின் திடீர் முடிவும் இரண்டு உயிர்களை பறித்த இந்த சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.