
கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்த ஹரிதாஸ் முரளி, கடந்த சில ஆண்டுகளாக “வேடன்” என்ற பெயரில் ராப் பாடல்களால் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றவர். 5 ஆண்டுகளுக்கு முன் “வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்” என்ற மலையாள ராப் பாடலின் மூலம் இணையத்தில் வைரலான இவர், பின்னர் தனது இயற்பெயரை மாற்றி ‘வேடன்’ என்ற கலைப்பெயருடன் இசைத்துறையில் பயணம் தொடர்ந்தார்.
மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் பல பாடல்களை எழுதி பாடிய வேடன், ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்தில் ‘குத்தந்திரம்’ மற்றும் ‘நரவேட்டை’ படத்தில் ‘வாடா வேடா’ எனும் பாடல்களால் பிரபலமானார். தற்போது தமிழ் சினிமாவில், கோலி சோடா புகழ் இயக்குநர் விஜய் மில்டன் இயக்கும் புதிய திரைப்படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார்.
இதற்கிடையில், அவருக்கு எதிரான பல சர்ச்சைகளும் வெளிவந்துள்ளன. 2021ஆம் ஆண்டு, சமூக வலைதளங்களில் ‘மீ டூ’ இயக்கத்தின் போது, ஒரு பாலியல் புகாரில் சிக்கிய வேடன், தனது தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்டார்.
அதேபோல் கடந்த ஏப்ரல் மாதம், கஞ்சா வைத்திருந்ததாக கூறி கொச்சியில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த வேடன், சிறுத்தை புலியின் பல் பொருத்திய செயின் அணிந்திருந்ததாகக் கூறி, கேரள வனத்துறையால் மீண்டும் கைது செய்யப்பட்டார். அதன் பின், எர்ணாகுளம் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில், கோட்டாயம் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் மருத்துவர் ஒருவர், திருக்காட்கரை காவல் நிலையத்தில் வேடன் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “2021ஆம் ஆண்டில் சமூக வலைதளங்களில் வேடனை சந்தித்தேன். பின்னர் 2023ஆம் ஆண்டு வரைக்கும் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்ற அவர், திருமணம் செய்யப்போவதாக நம்பவைத்தார். ஆனால், அந்த நம்பிக்கையை தவறவைத்து, பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புகாரை தொடர்ந்து, வேடனை விசாரணைக்கு வரவழைத்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீப காலமாக பிரபலமாகியுள்ள வேடன் மீதான இந்த தொடர்ச்சியான சர்ச்சைகள், ரசிகர்கள் மற்றும் பொது மக்களிடையே பெரும் அதிர்வலை உருவாக்கியுள்ளன.