
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் முகமதுபுரா மசூதி 2வது தெருவைச் சேர்ந்த முபாரக் பாஷா, நேதாஜி சாலையில் உள்ள ஸ்டேட் வங்கி எதிரே கடந்த 20 ஆண்டுகளாக பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். வழக்கம் போல இன்று காலை கடைக்குச் சென்ற அவர், வீட்டில் அவரது மனைவி சுல்தானா மற்றும் மகள் மிஸ்கானைத் தனியாக விட்டு சென்றிருந்தார்.
இந்நிலையில், இன்று பிற்பகல் 1 மணியளவில், பத்திரிகை கொடுப்பதாக கூறி புர்கா அணிந்த நபர் ஒருவர் வீட்டில் நுழைந்தார். ஆனால் உள்ளே சென்றதும் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துக் கொண்டு, மிஸ்கானும், சுல்தானாவும் மீது காட்டி மிரட்டியுள்ளார். பின்னர், வீட்டில் இருந்த 40 சவரன் தங்க நகையும், ரூ.5 லட்சம் ரொக்கப் பணமும் கொள்ளையடித்து விட்டு , புர்கா அணிந்தபடியே வீட்டில் இருந்து வெளியேறி தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவம் நடைபெற்ற வீடு, ஆம்பூர் டி.எஸ்.பி அலுவலகம், கிராமிய காவல் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்துக்கு 500 மீட்டர் தூரத்திலேயே அமைந்துள்ளது. மேலும், சற்று பின்னாலேயே அவர் வெளியேறும் காட்சிகள் அருகிலுள்ள வீட்டின் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.
தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன் ஆம்பூர் நகர காவல்துறையினர், கைரேகை நிபுணர்கள் மற்றும் சிசிடிவி ஆய்வுப்படை இணைந்து தடயங்களை சேகரித்தனர்.
கொள்ளை தொடர்பாக ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை மையமாக கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப் பகலில், ஆள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதியில் இப்படியான சம்பவம் நடந்ததால், ஆம்பூர் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.