6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள் – ஒருவர் கைது!

"Parents protest outside school after 6-year-old girl faces sexual harassment; one person arrested"


திருப்பூர் மாவட்டம் கே.வி.ஆர் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில், ஒன்றாம் வகுப்பு படித்து வரும் 6 வயது சிறுமி, நேற்று மாலை கழிவறைக்குச் சென்றபோது அவளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது

அப்போது கழிவறையை சுத்தம் செய்து கொண்டிருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஜெய் (27) என்ற வாலிபர், அந்த சிறுமிக்கு பாலியல் ரீதியான தொந்தரவு செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து சிறுமி தன் வகுப்பாசிரியரிடம் தெரிவித்திருந்தாலும், சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து, வீடு திரும்பிய சிறுமி, தாயிடம் அடி வயிற்று வலிப்பதாக கூறி, நடந்ததை பகிர்ந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு பள்ளியை முற்றுகையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

தகவலறிந்த கே.வி.ஆர் நகர் சரக உதவி கமிஷனர் ஜான் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இதனையடுத்து, தெற்கு அனைத்து மகளிர் காவல் துறை அதிகாரிகள், சிறுமியிடம் நடந்ததை உறுதி செய்துவிட்டு, போக்சோ சட்டம் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜெய் என்பவரை கைது செய்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பள்ளி நிர்வாகத்தின் செயல் அலட்சியத்தையும் பேசுபொருளாக்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, 100-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள், இன்று காலை பள்ளி முன்பு ஒன்று கூடி, “குழந்தைகளின் பாதுகாப்பு எங்கே?”, “நிர்வாகம் விளக்கம் தர வேண்டும்” என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவம் தொடர்பாக விசாரணை நடைப்பெற்று வரும் நிலையில், குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பாக பள்ளி நிர்வாகத்தின் மீது பெற்றோர்களின் நம்பிக்கை பெரிதும் சலித்துள்ளதாக கூறப்படுகிறது.