திருச்சி ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ.1 லட்சம் பறிமுதல்!

"Anti-corruption officials seize ₹1 lakh during raid at Trichy RTO office."


திருச்சி மாவட்டம், பிராட்டியூர் பகுதியில் செயல்பட்டு வரும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன தகுதி சான்றிதழ் வழங்கும் பணிகளில் லஞ்சம் வாங்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன.

இதையடுத்து, மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் போலீசார் நேற்று (ஜூலை 29) மதியம் திடீர் சோதனை நடத்தினர். அலுவலக கதவுகள் உள்ளாக பூட்டப்பட்டபின், ஒட்டுமொத்தமாக சோதனையில் இறங்கிய போலீசார், இரண்டு புரோக்கர்கள் வைத்திருந்த ரூ.56,000 மற்றும் ஆர்டிஓ நடராஜனின் காரில் இருந்த ரூ.50,000 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இவை கணக்கில் வராத பணமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஆர்டிஓ நடராஜன், மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா மற்றும் புரோக்கர்கள் சேதுராஜ், ரமேஷ் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது.

புரோக்கர்கள் மூலமாகவே லஞ்சம் வசூலிக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

சோதனை நேற்று இரவு 8.30 மணி வரை நீடித்தது. பறிமுதல் செய்யப்பட்ட தொகையுடன் போலீசார் அலுவலகத்தை விட்டு புறப்பட்டனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும், விசாரணை தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.