
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த இளம்பெண் மெர்சி, பம்மலைச் சேர்ந்த இளங்கோ என்பவருடன் கடந்த 15 ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்துள்ளார். திருமணமான இளங்கோ, தனது மனைவியுடன் பிரச்சனை என கூறி, கடந்த ஒரு வருடமாக மெர்சியுடன் லிவிங் டுகெதர் முறையில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து வாழ்ந்து வந்துள்ளார்.
இந்தக் காலத்தில், மெர்சி கர்ப்பமாகிய நிலையில், திருமணம் செய்துகொள்ள மறுத்துள்ளார் இளங்கோ. இதையடுத்து, மெர்சி திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த மனுவில், ‘‘நான் சேர்த்துவைத்த 125 சவரன் நகைகள் மற்றும் ரூ.45 லட்சம் பணத்தை இளங்கோ வெவ்வேறாக பெற்றுக்கொண்டு, தற்போது அனைத்தையும் மறுக்கிறார். 9 மாத கர்ப்பமான என்னை ஏமாற்றி விட்டு விலகி விட்டார்’’ என்று தெரிவித்துள்ளார்.
புகார் அளித்த மெர்சி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “8 நாட்களுக்கு முன்பே நான் புகார் கொடுத்தேன். ஆனால், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுப்புலட்சுமி வழக்குப் பதிவு செய்ய ரூ.10 ஆயிரம் கேட்டு பணம் வாங்கினார். வழக்குப் பதிவு செய்தபின்பும், இளங்கோவை அழைத்து எவ்வித விசாரணையும் செய்யவில்லை.
நான் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தும், காலை முதல் மாலை வரை நிற்க வைத்ததோடு, தகாத வார்த்தைகளிலும் திட்டினார். இன்றும் இளங்கோவை அழைத்து, சாதாரணமாக விசாரித்து அனுப்பிவிட்டார்.
இளங்கோ, ‘திருமணம் செய்ய முடியாது, குழந்தைக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை, பணமும் இல்லை’ என கூறிவிட்டுச் சென்றார். எனவே, என்னை மன உளைச்சலுக்கு உள்ளாக்கிய இளங்கோ மீதும், காவல் ஆய்வாளர் சுப்புலட்சுமி மீதும் உடனடி நடவடிக்கை எடுக்க காவல்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்” எனக் கூறினார்.
இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குற்றச்சாட்டுகளுக்கு அதிகாரிகள் என்ன பதில் அளிக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.