அரசியல் பிரமுகரின் வீட்டின் முன்பு நாட்டு வெடிகுண்டுகள் : தேனியில் பரபரப்பு!

"Country-made bombs discovered near a politician's residence; tension rises in Theni."


தேனி மாவட்டம் அல்லி நகரத்தைச் சேர்ந்த முருகன், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் தேனி புதிய பேருந்து நிலையம் செல்லும் பைபாஸ் சாலை அருகே புதிய வீடு ஒன்றை கட்டி, அதற்கான இல்ல திறப்பு விழாவையும் நடத்தியிருந்தார்.

இந்நிலையில், அந்த வீட்டின் முன்பு சுத்தம் செய்துகொண்டிருந்த காவலாளி, பிளாஸ்டிக் கவரில் சந்தேகத்திற்கிடமான பொருள் இருப்பதை கவனித்தார். உடனடியாக இது குறித்து முருகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்த முருகன், அந்தப் பையையும் அதில் இருந்த பொருளையும் பார்த்தபோது அதில் 5 நாட்டு வெடிகுண்டுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் தேனி போலீசாரிடம் புகார் அளித்தார்.

உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசாருடன், வெடிகுண்டு நிபுணர்கள் குழுவும் சேர்ந்து வெடிகுண்டுகளை பாதுகாப்பாக கைப்பற்றி, மேலும் ஆய்வுக்காக மதுரைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்த விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சி பிரமுகரின் வீட்டின் முன்பு வெடிகுண்டுகள் இருப்பது, திட்டமிட்ட மிரட்டலா அல்லது ஏதேனும் பழிவாங்கும் முயற்சியா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம், தேனி மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சி மற்றும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் வலுப்படுத்தி வருகின்றனர்.