
கரீபியன் தீவுகளில் அமைந்த டொமினிகன் குடியரசின் தலைநகரான சாண்டோ டொமிங்கோவில் அமைந்துள்ள பிரபல இரவு கேளிக்கை விடுதியான ஜெட் செட் விடுதியில் மிகப்பெரிய விபத்து நிகழ்ந்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை, அந்த விடுதியில் இசை நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் , பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்த வேளையில் திடீரென அந்த விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் பலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்
ஆரம்ப கட்ட மீட்பு பணிகளையடுத்து 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகின.
மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 12 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு சிலர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த 160 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், தற்போது பலி எண்ணிக்கை 218 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பலர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என்பதால், அவர்களை அடையாளம் காணும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் போலீசார் அவர்களின் உடைமைகள் மற்றும் ஆவணங்களை வைத்து அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீடிரென நிகழ்ந்த இந்த சம்பவத்தால் பல வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளது தற்போது பேசுபொருளாக உள்ளது.