
தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் சுற்றுலா சீசன் களைகட்டி வருகிறது. இதில், வெளியூரிலிருந்தும், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் சுற்றுலா காட்சிகளை காணவும், அருவிகளில் குளிக்கவும் குடும்பத்துடன் விடுமுறை நாட்களில் திரண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், இன்று (ஜூலை 30) காலை தூத்துக்குடியில் இருந்து சுற்றுலாவிற்கு வேன் ஒன்றில் வந்த 20 சுற்றுலாப் பயணிகள் பழைய குற்றால அருவியில் குளித்துவிட்டு மீண்டும் திரும்பிச் சென்றனர்.
அப்போது குற்றாலம் நோக்கி எதிர்புறமாக வந்த ஒரு ஆட்டோவை வேன் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த சென்னையைச் சேர்ந்த யாசின் என்ற 55 வயது பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த குற்றால காவல்துறையினர் விரைந்து சம்பவ இடத்துக்குச் சென்று, காயமடைந்தவர்களை மீட்டு, தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதில், 9 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆட்டோ ஓட்டுநரும் பலத்த காயமடைந்துள்ள நிலையில், அவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பாக குற்றாலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுலா பயணிகள் அதிகம் செல்வதால், போக்குவரத்து கட்டுப்பாடுகள், வாகன ஒழுங்குகள் தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியதாயுள்ளது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சம்பவம் சுற்றுலா பயணிகள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.