
சென்னை ஆவடி அருகே உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வரும் சிறுமி ஒருவர், சிஆர்பிஎஃப் வீரர் சுரேஷ் குமார் என்பவரால் பாலியல் தொல்லைக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது
தற்காப்புக் கலை பயின்றிருந்த அந்த மாணவி, சுரேஷ் குமாரின் கொடுமையை தாங்க முடியாமல் தாக்குதல் நடத்தி, அவரது முகத்தில் காயம் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் சிஆர்பிஎஃப் அலுவலகத்தில் புகார் அளித்த போதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மனமுடைந்த சிறுமி, தனது பெற்றோருடன் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தை அணுகி புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில், சிஆர்பிஎஃப் வீரர் சுரேஷ் குமாரை போலீசார் கைது செய்து, காவல்நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தினர். சிறுமி நடுங்கிய குரலில், கண்ணீர் மல்க தன்னை சுரேஷ் குமார் தொந்தரவு செய்த விவரங்களை போலீசாரிடம் வெளியிட்டார்.
சிஆர்பிஎஃப் வீரரின் இந்தக் குற்றச்செயல் திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவிக்கு உரிய பாதுகாப்பும், நீதியும் கிடைக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.