
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவைச் சேர்ந்த 17 வயது சிறுமி, அதே பகுதியைச் சேர்ந்த சிவபாரதி என்ற 23 வயது இளைஞருடன் பழகி வந்தார். இந்நிலையில், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, அந்த சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், அந்த சிறுமி தற்போது கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட நிலையில், உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றங்களை கவனித்த தாய், விசாரித்த போது உண்மை தெரிய வந்தது. சிவபாரதி தன்னை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி தெரிவித்ததைக் கேட்ட தாய் அதிர்ச்சி அடைந்தார்.
தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதமே ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், ஆனால் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறுகிறார்.
இதை எதிர்த்து, தனது மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக் கோரி, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தாய், “ஏழையாகப் பிறந்தது குற்றமா? வாரம் வாரமாக காவல் நிலையத்தில் அலைய வைத்தும் என் மகளுக்கு நீதியே இல்லை. காவல்துறை அலட்சியமே என் தற்கொலை எண்ணங்களுக்குக் காரணம்,” எனக் கதறியுள்ளார்.
மேலும், சிவபாரதியின் பெற்றோர் அவரை மறைத்து வைத்துள்ளதாகவும், “இந்தக் குழந்தைக்கு எங்கள் மகன் பொறுப்பல்ல” என அவமதித்து பேசியதோடு, கொலை மிரட்டல்களும் விடுத்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இச்சம்பவம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்த, தாயை சமாதானப்படுத்திய போலீசார், விரைவில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.
சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.